Monday, July 23, 2012

மாற்றம் வருமா??

இன்று எனது Yamaha RX 135 வண்டியின் இன்சூரன்ஸ் புதுபிக்க வேண்டிய வேலை இருந்ததால் காலை அதற்குத் தேவையான அனைத்து காகிதங்களுடன் நேராக இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கு சென்றேன். நான் எதிர் கொண்ட, இன்னும் மாறாத வழக்கமான சம்பவங்களை இங்க தொகுத்துள்ளேன்...

முதலில் என் தவறுகள் இங்கே-
1. என்னுடைய பாலிசி முடிவு காலம் -  22/07/2012 நள்ளிரவு
2. ஞாயிறு நள்ளிரவு வரை அவகாசம் உள்ள என் பாலிசியை வெள்ளி காலையே புதுபிக்காதது (சனி, ஞாயிறு விடுமுறை ஆயிற்றே)
3. சரியான சில்லறை இல்லாமல் சென்றது.

இனி இதோ என்னுடைய பாலிசி புதுப்பித்த அனுபவம்-

10:00 மணி: 
இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு சென்ற பொழுது 4 அல்லது 5 பேரை பார்த்திருப்பேன். அவர்களில் ஒருவரிடம் சென்று நான் வந்த காரணத்தை சொன்ன போது நேராக கடிகாரத்தை பார்த்து விட்டு என்னிடம் சற்று காத்திருக்குமாறு சொன்னார்.

நான்: சார்.. என்னோட இன்சூரன்ஸ் பாலிசி எக்ஸ்பயரி ஆயிருச்சு, ரெநேவல் பண்ணனும்.
அதிகாரி(?): ஹ்ம்ம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
நான்: ஓகே சார்.

ஒரு 15 நிமிடங்கள் கழித்து அலுவகத்தில் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு (இந்நேரம் மொத்தம் 15 அலுவலர்கள் வந்திருப்பார்கள்)என்னை காத்திருக்க  சொன்னவரை காணாததால் முதல் மேஜையில் இருந்த ஒரு பெண் அலுவலரிடம் சென்று நான் வந்த காரணத்தை சொல்லி என் பாலிசி சம்பந்தப்பட்ட காகிதங்களை காட்டினேன்.. அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை போலும், நான் நீட்டிய காகிதங்கள் எதையுமே சட்டை செய்யாமல், எனக்கு வேறு ஒரு பெண் அலுவலரை காட்டி "அவங்கள போய்  பாருங்க" என்றார். நானும் "தேங்க்ஸ் மேடம்" என்று சொல்லிவிட்டு நேராக அவர் காட்டிய அலுவலரிடம் சென்றேன்.

அவரிடம் சென்று நான் பாலிசி புதுபிக்க வேண்டும் என்று கூறிய மறு நொடி-
அலுவலர்: அதுக்கு எதுக்கு என் கிட்ட வந்தீங்க
நான்: அந்த மேடம் தான் உங்களை பாக்க சொன்னாங்க
அலுவலர்: அப்படியா.. (நான் நீட்டிய என் பாலிசி காகிதங்களை பார்த்துக்கொண்டே) பாலிசி எக்ஸ்பயரி ஆய்ருச்சா...
நான்: ஆமாம்.. நேத்து தான் எக்ஸ்பயரி ஆச்சு மேடம்
அலுவலர்: Driving Licence இருக்கா? (எதற்கு கேட்டார் என்று தெரியவில்லை)
நான்:  இருக்குங்க (என் driving licence காண்பித்தேன்)
அலுவலர்: சரி.. இந்த form fill பண்ணுங்க
நான்: ஓகே மேடம்  

அவர் குடுத்த அந்த காகிதத்தில் கேட்டிருந்த அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து அவரிடம் கொண்டு சென்று கொடுதேன். வாங்கி வைத்து கொண்டு "வண்டிய பாக்கணும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க" என்றார். "சரிங்க" என்று சொல்லி விட்டு ஒரு நாற்காலியை தேடி போய் அமர்ந்தேன்..

ஒரு 15 நிமிடங்கள் கழித்து அந்த அலுவலர் "நீங்க போகலையா" என்றார். என்னிடம் தான் சொல்கிறார் என்பதை உறுதி படித்திக்கொண்டு "எங்கிங்க மேடம்" என்றேன். அவர் "சீக்கிரம் போங்க வண்டி பாக்க ஒருத்தர் போயிருக்கார்" என்றார். என் நன்றியை தெரிவித்துவிட்டு வேகமாக கீழே சென்றேன்.

அங்கே.. ஒருவரை சுற்றி ஒரு 5-6 பேர் காகிதங்களை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். நேராக அவரிடம் சென்று என்னுடைய பாலிசி காகிதங்களையும் நான் நிரப்பிய form யும் நீட்டினேன். அவர் என்னை பார்த்து "நீங்க நேரா என் கிட்ட வர வேண்டியது தான?" என்றார். நான் "எனக்கு தெரியாது சார்,
அவங்க தான் அந்த மேடம்ஐ பார்க்க சொன்னாங்க" என்றேன். "இனிமேல் என்ன வந்து பாருங்க.. சரியா?" என்றவரிடம், "சரி" என்று சொல்லிவிட்டு என் வண்டியை காண்பித்தேன். "என்ன அவசரம்.. கொஞ்சம் இருங்க" என்று சொல்லிவிட்டு "நீங்க வண்டி எடுத்து 6 மாசம் தான ஆச்சு......." என்று அருகிலிருந்த அவருக்கு தெரிந்த ஒருவருடன் உரையாட ஆரம்பித்தார்.

ஒரு 20 நிமிடங்கள் கழித்து என் வண்டி அருகே வந்தவர், என் வண்டியை புகைப்படம் எடுத்துக்கொண்டு நான் கொடுத்த காகிதத்தில் தன் கையெழுத்தை போட்டு கொடுத்துவிட்டு "நீங்க மேல ஆபீஸ்க்கு  போலாம்" என்றார். அவருக்கும் ஒரு நன்றியை செலுத்திவிட்டு வேகமாக மேலே வந்தேன்.

என்னை கீழே அனுப்பிய அலுவலரிடம் சென்று அந்த காகிதங்களை நீட்டிய பொழுது "இருங்க.. போட்டோ வரட்டும்" என்றார். ஒரு 10 நிமிடங்களை தாண்டியும் புகைப்படம் எடுத்தவர் வரவில்லை. நான் நேராக அந்த அலுவலரிடம் சென்று "எவ்வளவு நேரம் ஆகும் மேடம்" என்றேன். அவரோ "அவங்கள போயி  பாருங்க" என்று நான் முதலில் பார்த்த அந்த பெண் அலுவலரை காண்பித்தார்.

அவரிடம் சென்ற பொழுது, அவர் மற்றொரு பெண் அலுவலருடன் உரையாடிக்கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் "ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு அவர்கள் உரையாடலை தொடர்ந்தார்.

அலுவலர் 1: ஹ்ம்ம்' சொல்லுங்க
அலுவலர் 2: இப்போ Sq Ft ரேட் எல்லாம் கம்மி தான். அவ்வளவு வராது. நான் எங்க Er கிட்ட பேசிட்டு சொல்லுறேன்....

அவர்கள் உரையாடல் தொடரவே, சற்று தூரத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தேன். 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் உரையாடல் முடியவே, நான் மீண்டும் அலுவலரிடம் சென்று என் காகிதங்களை காட்டினேன். அதை பார்த்துவிட்டு "நீங்க அவங்க கிட்ட குடுங்க" என்று தன்னுடன் உரையாடி கொண்டிருந்த அந்த மற்றொரு அலுவலரை காண்பித்தார். அவரோ வேறொரு பெண் அலுவலரிடம் அதே கதையை பேசிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து தன் இருக்கைக்கு வந்தார்.

அவரிடம் சென்று என் பாலிசி காகிதங்களை நீட்டினேன். வாங்கி வைத்து கொண்டு என்னை அமருமாறு சொன்னார். அங்கு இருக்கை இல்லாததால் வேறு ஒரு இடத்தில சென்று அமர்ந்து அவர் என்ன செய்கிறார் என்று பார்த்து கொண்டிருந்தேன் .

என் பாலிசி காகிதங்களை வாங்கி வைத்தவர், ஒரு சில நிமிட போராட்டத்திற்கு பின் தன் மூக்கு கண்ணாடியை தேடி கண்டுபிடித்து என் காகிதங்களில் இருந்த தகவல்களை தன் கணனியில் பதிவு செய்ய ஆரம்பித்தார். இடையில் நிறுத்திவிட்டு "விக்ரம் குமார், Driving Licence இருக்கா " என்று உரக்க கேட்டார். நான் எழுந்து சென்று "இருக்குங்க மேடம்" என்று கூறி என் Driving Licenceஐ  காண்பித்தேன்.

ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு என் காகிதங்களை திருப்பி தந்துவிட்டு, தன் பக்கத்துக்கு மேஜையை காண்பித்து "அவர் கிட்ட குடுங்க" என்றார். நான் நம்ம  வடிவேலு மாதிரி "இன்னும் எத்தன பேரு....." என்று நினைத்துக் கொண்டு அவரிடம் சென்றேன்.

அனைத்து காகிதங்களையும் வாங்கி பார்த்து விட்டு தன் கணனியை தேடி "720 ரூபாய் குடுங்க" என்றார். நானும் வேகமாக 750 ரூபாயை எடுத்து கொடுதேன் (சில்லறை இல்லாத காரணம் தான்.. அவர் பக்கத்தில் இருந்த பெட்டியில் 10 ரூபாய் கட்டு  2 இருந்த தைரியம்  வேறு) 700 ரூபாயை வாங்கிக்கொண்டு "20 ரூபாய் குடுங்க" என்றவரிடம் "சில்லறை இல்ல சார்" என்றேன். சற்றும் யோசிக்காமல் "வாங்கிட்டு வந்திடுங்க" என்றார் பாருங்களேன்.... நான் சற்று திகைத்து தான் போய்விட்டேன்.

நேரம் 12 மணியை தொட்டுவிட்டது. நான் வேகமாக கீழே சென்று சில்லறை வாங்க கடையை தேடினேன். கண்ணில் ஒரு bakery தென்பட்டது. நேராக சென்று குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துவிட்டு அப்படியே சில்லறை மாற்றிக்கொண்டு வந்தேன்.

நேராக அலுவலரிடம் சென்று 20 ரூபாயை கொடுத்தேன் . அதை வாங்கிக்கொண்டு ரசீதும் என் காகிதங்களையும் கொடுத்து மற்றொரு அலுவலரிடம் என்னை அனுப்பினார். 5 நிமிட காத்திருக்குப்பின் என்னுடைய புதிய பாலிசி ஆவணங்களை பெற்றுக்கொண்டு மிக பெரிய நன்றியை தெரிவித்துவிட்டு சற்றே சோர்வாக என் வண்டியை நோக்கி நடந்தேன்.

Monday, January 30, 2012

படித்ததில் பிடித்தது

நன்றி.. திரு.இயகோகா சுப்பிரமணியம்

ஒன்றான பாரதத்தை ஒருங்கிணைந்து துண்டாடி
உடன்பிறப்பை வெறுப்பேற்றி பகையாக்கி வைத்ததுவும்;
சென்றோடி ஒதுங்கிவிட்ட சுயநல பரங்கியர்கள் 
சூழ்ச்சியால் இந்தியரின் மனவளத்தை சிதைத்ததுவும்;
வென்றாள வந்தவர்கள் தின்றதை தீர்த்தத்தை
வெடிவைத்தும் பொடிவைத்தும் மக்களிடம் மறைத்ததுவும்;
மன்றாடி மாமனிதர் பெற்றதை பாராளு
மன்றத்தில் கண்மூடி குழிதோண்டி புதைத்ததுவும்;

ஊழல் ஒழியவென்று உண்ணாது தவமிருந்து 
உயர்ந்தவரை பொய்யரென்று ஊடகத்தில் உரைத்ததுவும்;
சூழல் கெடுமளவு மண்வளத்தில் நீர்நிலையில் 
அந்நியரின் விஷவிதைகள் நஞ்சுமழை பொழிந்ததுவும்;
பூமலையும் தேன்தினையும் பொங்கிவரும் வனவழகைப்
பழாக்கித் தினம்வெட்டி பறவைகளை அழித்ததுவும்;
நாவளையும் என்பதனால் நாள்தோறும் சொல்மாற்றி
நம்பினோர் வாழ்க்கையிலே வஞ்சகம் இழைத்ததுவும்;

இத்தாலி வேண்டாம் இவன்துனையும் வேண்டாம்
இல்லறமே தவறென்று எவருடனும் கூடுவதும்;
கொத்தோடு குலையாடக் கூடியே வாழ்ந்தவர்கள்
தெறித்தோடித் தனிமையிலே தினம்நொந்து வாடுவதும்;
பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவென்று
 மதுவிற்று அரசாங்கம் வருமானம் தேடுவதும்;
இத்தோடு போதுமென இளமைதான் சதமென்று
தப்பான ஆட்டங்கள் தலைகனத்து ஆடுவதும்;

ஆணோடு ஆண்சேரும் ஒவ்வாத உறவுதனை 
என்னுரிமை எனகூறி போர்க்கொடிகள் ஏந்துவதும்;
ஊனோடு கலந்துவிட்ட உன்னத பண்புகளை
உதவாது எனவுரைத்து எதிர்திசையில் நீந்துவதும்;
வானோடு வளர்ந்திருந்த முன்னோரின் வார்த்தைகளை
வீணென்று புறந்தள்ளி வீணருடன் சேர்ந்ததுவும்;
ஊரோடு பலர்சேர்ந்து உச்சத்தில் கூச்சலிட்டால்
கொலைகாரன் தியாகியெனக் கூசாமல் ஏற்பதுவும்;

கோடிகளில் கொள்ளையிட்டு சிறைசென்று மாண்புகெட்டும்
குற்றமே இல்லையெனக் குணவானாய் நடிப்பதுவும்;
தேடியதில் கிடைத்ததெனத் தோண்டியதை வழித்தெடுத்து
தேசத்தில் கனிமங்கள் திருட்டிலே வடிப்பதுவும்;
ஊர்ச்சொத்து சிவன்சொத்து என்றறிந்தும் விற்றுப்பின்
ஊருக்கே நீதிசொல்லும் தலைவனென படிந்ததுவும்;
ஒர்ச்சத்தும் இல்லாத அயல்நாட்டு தின்பண்டம்
உயர்ந்ததென வீம்புக்கு உண்டு உடல் கெடுத்ததுவும்;

இன்றோடு ஒழியட்டும், இனியேனும் விடியட்டும்
இளைஞர்கள் எல்லார்க்கும் புதுஞானம் எழவேண்டும்;
ஒன்றான எம்தேசம் ஒருகுரலில் ஆணையிட்டால்
இங்குள்ள துரோகிகள் இடுப்பொடிந்து விழவேண்டும்;
சென்றாண்டு நைல்நதியில் மல்லிகை பூவெடித்த
சீவனுள்ள போராட்டம் மாற்றங்கள் தரவேண்டும்;
குன்றாண்டு தமிழ்ஆளும் குமரனவன் கருணைமனம்
எல்லோரும் நலம்வாழ புத்தாண்டில் துணைவேண்டும்

                                                                       - இயகோகா சுப்பிரமணியம்

Monday, January 16, 2012

ஈஷா யோகா.. என் பார்வையில்..

யோகா செய்ய வேண்டும் என்ற என் முடிவிற்கு பின் மிக பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. மிக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உடற்பயிர்ச்சி கூடத்திற்கு சென்று உடலை வருத்தி செய்யும் செயல்களில் எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை அதற்கான உடல் வாகுவும் எனக்கில்லை.

யோகா சென்று அமைதி தேட வேண்டுமென்ற அவசியம் எனகிருந்ததில்லை (என் மனைவிக்கும் மகனுக்கும் நன்றி), இருந்தாலும் என் தாய் வழி தூரத்து உறவான என் தாத்தா (ஒரு சித்தா வைத்தியர்) எனக்கு சிறு வயதில் சொன்னதெல்லாம் அவர் யோகா செய்ததினால் அடைந்த பலன்கள் மட்டும் தான். அன்று முதல் என்னை அறியாமல் எனக்குள் யோகா கற்க வேண்டுமென்ற ஓர் உந்துதல் இருந்துகொண்டே இருந்தது.

நான் சென்னையில் இருந்த பொழுது எனக்கு இருந்த மிக பெரிய சவாலே என் குடும்பத்தை பிரிந்திருப்பது தான். அது நிச்சயம் மனதளவில் என்னுள் ஒரு பாதிப்பை உண்டாக்கவே செய்தது. நான் கோவையில் வேலை கிடைத்து திரும்பி வந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சியும் சற்று அதிகமானதாகவே இருந்தது. இந்த நிகழ்வுகள் என்னை சற்று சிந்திக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
 
வருத்தமும் மகிழ்ச்சியும் இந்த இரு தருணங்களில் அளவு கடந்தே இருந்தது. மனதளவில் எனக்கு சமநிலை இல்லாதது தெளிவாக புரிந்தது. யோகா கற்க இதை விட சிறந்த தருணம் எனக்கு மீண்டும் அமையுமா என்று எனக்கு தெரியாது ஆனால் அதை ஆரம்ப அளவில் மட்டுமாவது கற்பது என்று முடிவு செய்தேன்.

என் வீட்டிற்க்கு அருகில் இருந்த ஒரு யோகா வகுப்பில் இணைந்து என் முடிவை செயல் படுத்தினேன். ஒரு மாதம் காலை அவர்கள் சொல்லிகொடுத்த எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தேன். ஒரு ஞாயிற்றுகிழமை தீக்ஷை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கற்று கொடுத்த யோகாவை தினமும் செய்து வந்தேன்.

என் தேடல் முற்றிலும் வேறாக இருந்தது. அந்த யோகா என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. நிச்சயம் அவர்களையோ அவர்கள் கற்று தந்த யோகா கலையோ நான் தவறாக சொல்ல மாட்டேன். என் தேடலுக்கு அது விடை கொடுக்க முடியவில்லை அல்லது என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நாள் எங்கள் company நிறுவனர் சதீஷ் சரவணன் அவர்களுடன் உரையாடி கொண்டிருந்த பொழுது அவர் என் யோகா பற்றி கேட்டுக்கொண்டு நான் தொடர்ந்து என்னுடைய சாதனாக்களை செய்ய வேண்டுமென்று சொன்னார். அவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்களில் என் தேடலுக்கான விடைகளை அவர் அறிந்து வைத்திருப்பதை எண்ணி ஆச்சர்யம் அடைந்தேன். என்னதான் விடைகள் அவருக்கு தெரிந்திருந்தாலும் அதை நானல்லவா உணர வேண்டும்?? அதை தானே தேடிகொண்டிருந்தேன்???

அவரிடம் கேட்டுகொண்டு ஈஷா நடத்திய ஆரம்ப வகுப்பான 7 நாள் தியான வகுப்பில் இணைந்தேன். அந்த 7 நாட்களையும் விவரிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தாலும் இந்த பக்கம் யாரையும் தவறாக திசை திருப்ப கூடாது என்பதற்காக என் உணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.


என் நண்பர்கள் சொல்லுவது உண்மை தான்.. மொத்தம் 30 நிமிடங்கள் செய்யும் சாதனாவிற்கு 7 நாட்கள் தேவை இல்லைதான். நாம் வாழ்வது வீட்டில் தானே, அஸ்திவாரம் எதற்கு?? எனக்கு அந்த 7 நாட்கள் எனக்குள் ஒரு அஸ்திவாரம் கட்டிய உணர்வுதான் உள்ளது. சத்குரு உரைகளும், நான் அங்கு செய்த மனதளவிலான பயிற்சிகளும் நிச்சயம் நான் செய்யும் சாதனாவிற்கு ஒரு பலமான அஸ்திவாரமே. அது தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து. வெறும் சாதனா செய்வது என்ன தரும் என்பதை என் முந்தைய யோகா வகுப்பில் கற்றுகொண்டேன். அது எனக்கு தேவை இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்தேன்.


தொடர்ந்து சாதனா செய்து வந்தேன். என்னுள் என்னால் உணரக்கூடிய மாற்றங்களை கண்டு வியந்தேன். தொடர்ந்து தேட தொடங்கினேன், ஆன்மிகம் என்ற வார்த்தையின் உட்பொருளை உணர தொடங்கினேன். சுகம் துக்கம் இந்த இரண்டும் என்னவென்று அறிய தொடங்கினேன்...


வீட்டை துறந்து காடு போய் துறவறம் புரிவது ஆன்மிகம் என்றால் அதை செய்வது தான் இந்த உலகில் மிக எளிது. அனால் ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு ஆன்மிகம் என்பதை உணர்வது எவ்வளவு ஒரு உயர்ந்த நிலை என்பதை உணர தொடங்கினேன்..


நான் வெளியில் தேடி திரிந்த விடைகள் எல்லாம் எனக்குளே இருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டேன். என்னை என்னுள்ளே தேட கற்றுக்கொண்டேன்...


நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அனால் என் வாழ்கை நான் தேடிய வழியில் செல்கிறது என்பது மட்டும் நிச்சயம்... 
 

பி.கு. இதில் குறிப்பிட பட்டவை அனைத்தும் என்னுடைய உணர்வுகளே.. இது யாரையும் புண்படுத்தவோ வழி நடத்தவோ எழுதப்பட்டவை அல்ல.