
இன்று எனது Yamaha RX 135 வண்டியின் இன்சூரன்ஸ் புதுபிக்க வேண்டிய வேலை இருந்ததால் காலை அதற்குத் தேவையான அனைத்து காகிதங்களுடன் நேராக இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கு சென்றேன். நான் எதிர் கொண்ட, இன்னும் மாறாத வழக்கமான சம்பவங்களை இங்க தொகுத்துள்ளேன்...
முதலில் என் தவறுகள் இங்கே-
1. என்னுடைய பாலிசி முடிவு காலம் - 22/07/2012 நள்ளிரவு
2. ஞாயிறு நள்ளிரவு வரை அவகாசம் உள்ள என் பாலிசியை வெள்ளி காலையே புதுபிக்காதது (சனி, ஞாயிறு விடுமுறை ஆயிற்றே)
3. சரியான சில்லறை இல்லாமல் சென்றது.
இனி இதோ என்னுடைய பாலிசி புதுப்பித்த அனுபவம்-
10:00 மணி:
இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு சென்ற பொழுது 4 அல்லது 5 பேரை பார்த்திருப்பேன். அவர்களில் ஒருவரிடம் சென்று நான் வந்த காரணத்தை சொன்ன போது நேராக கடிகாரத்தை பார்த்து விட்டு என்னிடம் சற்று காத்திருக்குமாறு சொன்னார்.
நான்: சார்.. என்னோட இன்சூரன்ஸ் பாலிசி எக்ஸ்பயரி ஆயிருச்சு, ரெநேவல் பண்ணனும்.
அதிகாரி(?): ஹ்ம்ம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
நான்: ஓகே சார்.
ஒரு 15 நிமிடங்கள் கழித்து அலுவகத்தில் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு (இந்நேரம் மொத்தம் 15 அலுவலர்கள் வந்திருப்பார்கள்)என்னை காத்திருக்க சொன்னவரை காணாததால் முதல் மேஜையில் இருந்த ஒரு பெண் அலுவலரிடம் சென்று நான் வந்த காரணத்தை சொல்லி என் பாலிசி சம்பந்தப்பட்ட காகிதங்களை காட்டினேன்.. அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை போலும், நான் நீட்டிய காகிதங்கள் எதையுமே சட்டை செய்யாமல், எனக்கு வேறு ஒரு பெண் அலுவலரை காட்டி "அவங்கள போய் பாருங்க" என்றார். நானும் "தேங்க்ஸ் மேடம்" என்று சொல்லிவிட்டு நேராக அவர் காட்டிய அலுவலரிடம் சென்றேன்.
அவரிடம் சென்று நான் பாலிசி புதுபிக்க வேண்டும் என்று கூறிய மறு நொடி-
அலுவலர்: அதுக்கு எதுக்கு என் கிட்ட வந்தீங்க
நான்: அந்த மேடம் தான் உங்களை பாக்க சொன்னாங்க
அலுவலர்: அப்படியா.. (நான் நீட்டிய என் பாலிசி காகிதங்களை பார்த்துக்கொண்டே) பாலிசி எக்ஸ்பயரி ஆய்ருச்சா...
நான்: ஆமாம்.. நேத்து தான் எக்ஸ்பயரி ஆச்சு மேடம்
அலுவலர்: Driving Licence இருக்கா? (எதற்கு கேட்டார் என்று தெரியவில்லை)
நான்: இருக்குங்க (என் driving licence காண்பித்தேன்)
அலுவலர்: சரி.. இந்த form fill பண்ணுங்க
நான்: ஓகே மேடம்
அவர் குடுத்த அந்த காகிதத்தில் கேட்டிருந்த அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து அவரிடம் கொண்டு சென்று கொடுதேன். வாங்கி வைத்து கொண்டு "வண்டிய பாக்கணும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க" என்றார். "சரிங்க" என்று சொல்லி விட்டு ஒரு நாற்காலியை தேடி போய் அமர்ந்தேன்..
ஒரு 15 நிமிடங்கள் கழித்து அந்த அலுவலர் "நீங்க போகலையா" என்றார். என்னிடம் தான் சொல்கிறார் என்பதை உறுதி படித்திக்கொண்டு "எங்கிங்க மேடம்" என்றேன். அவர் "சீக்கிரம் போங்க வண்டி பாக்க ஒருத்தர் போயிருக்கார்" என்றார். என் நன்றியை தெரிவித்துவிட்டு வேகமாக கீழே சென்றேன்.

அங்கே.. ஒருவரை சுற்றி ஒரு 5-6 பேர் காகிதங்களை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். நேராக அவரிடம் சென்று என்னுடைய பாலிசி காகிதங்களையும் நான் நிரப்பிய form யும் நீட்டினேன். அவர் என்னை பார்த்து "நீங்க நேரா என் கிட்ட வர வேண்டியது தான?" என்றார். நான் "எனக்கு தெரியாது சார்,
அவங்க தான் அந்த மேடம்ஐ பார்க்க சொன்னாங்க" என்றேன். "இனிமேல் என்ன வந்து பாருங்க.. சரியா?" என்றவரிடம், "சரி" என்று சொல்லிவிட்டு என் வண்டியை காண்பித்தேன். "என்ன அவசரம்.. கொஞ்சம் இருங்க" என்று சொல்லிவிட்டு "நீங்க வண்டி எடுத்து 6 மாசம் தான ஆச்சு......." என்று அருகிலிருந்த அவருக்கு தெரிந்த ஒருவருடன் உரையாட ஆரம்பித்தார்.
ஒரு 20 நிமிடங்கள் கழித்து என் வண்டி அருகே வந்தவர், என் வண்டியை புகைப்படம் எடுத்துக்கொண்டு நான் கொடுத்த காகிதத்தில் தன் கையெழுத்தை போட்டு கொடுத்துவிட்டு "நீங்க மேல ஆபீஸ்க்கு போலாம்" என்றார். அவருக்கும் ஒரு நன்றியை செலுத்திவிட்டு வேகமாக மேலே வந்தேன்.
என்னை கீழே அனுப்பிய அலுவலரிடம் சென்று அந்த காகிதங்களை நீட்டிய பொழுது "இருங்க.. போட்டோ வரட்டும்" என்றார். ஒரு 10 நிமிடங்களை தாண்டியும் புகைப்படம் எடுத்தவர் வரவில்லை. நான் நேராக அந்த அலுவலரிடம் சென்று "எவ்வளவு நேரம் ஆகும் மேடம்" என்றேன். அவரோ "அவங்கள போயி பாருங்க" என்று நான் முதலில் பார்த்த அந்த பெண் அலுவலரை காண்பித்தார்.
அவரிடம் சென்ற பொழுது, அவர் மற்றொரு பெண் அலுவலருடன் உரையாடிக்கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் "ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு அவர்கள் உரையாடலை தொடர்ந்தார்.
அலுவலர் 1: ஹ்ம்ம்' சொல்லுங்க
அலுவலர் 2: இப்போ Sq Ft ரேட் எல்லாம் கம்மி தான். அவ்வளவு வராது. நான் எங்க Er கிட்ட பேசிட்டு சொல்லுறேன்....
அவர்கள் உரையாடல் தொடரவே, சற்று தூரத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தேன். 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் உரையாடல் முடியவே, நான் மீண்டும் அலுவலரிடம் சென்று என் காகிதங்களை காட்டினேன். அதை பார்த்துவிட்டு "நீங்க அவங்க கிட்ட குடுங்க" என்று தன்னுடன் உரையாடி கொண்டிருந்த அந்த மற்றொரு அலுவலரை காண்பித்தார். அவரோ வேறொரு பெண் அலுவலரிடம் அதே கதையை பேசிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து தன் இருக்கைக்கு வந்தார்.
அவரிடம் சென்று என் பாலிசி காகிதங்களை நீட்டினேன். வாங்கி வைத்து கொண்டு என்னை அமருமாறு சொன்னார். அங்கு இருக்கை இல்லாததால் வேறு ஒரு இடத்தில சென்று அமர்ந்து அவர் என்ன செய்கிறார் என்று பார்த்து கொண்டிருந்தேன் .
என் பாலிசி காகிதங்களை வாங்கி வைத்தவர், ஒரு சில நிமிட போராட்டத்திற்கு பின் தன் மூக்கு கண்ணாடியை தேடி கண்டுபிடித்து என் காகிதங்களில் இருந்த தகவல்களை தன் கணனியில் பதிவு செய்ய ஆரம்பித்தார். இடையில் நிறுத்திவிட்டு "விக்ரம் குமார், Driving Licence இருக்கா " என்று உரக்க கேட்டார். நான் எழுந்து சென்று "இருக்குங்க மேடம்" என்று கூறி என் Driving Licenceஐ காண்பித்தேன்.
ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு என் காகிதங்களை திருப்பி தந்துவிட்டு, தன் பக்கத்துக்கு மேஜையை காண்பித்து "அவர் கிட்ட குடுங்க" என்றார். நான் நம்ம வடிவேலு மாதிரி "இன்னும் எத்தன பேரு....." என்று நினைத்துக் கொண்டு அவரிடம் சென்றேன்.
அனைத்து காகிதங்களையும் வாங்கி பார்த்து விட்டு தன் கணனியை தேடி "720 ரூபாய் குடுங்க" என்றார். நானும் வேகமாக 750 ரூபாயை எடுத்து கொடுதேன் (சில்லறை இல்லாத காரணம் தான்.. அவர் பக்கத்தில் இருந்த பெட்டியில் 10 ரூபாய் கட்டு 2 இருந்த தைரியம் வேறு) 700 ரூபாயை வாங்கிக்கொண்டு "20 ரூபாய் குடுங்க" என்றவரிடம் "சில்லறை இல்ல சார்" என்றேன். சற்றும் யோசிக்காமல் "வாங்கிட்டு வந்திடுங்க" என்றார் பாருங்களேன்.... நான் சற்று திகைத்து தான் போய்விட்டேன்.
நேரம் 12 மணியை தொட்டுவிட்டது. நான் வேகமாக கீழே சென்று சில்லறை வாங்க கடையை தேடினேன். கண்ணில் ஒரு bakery தென்பட்டது. நேராக சென்று குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துவிட்டு அப்படியே சில்லறை மாற்றிக்கொண்டு வந்தேன்.

நேராக அலுவலரிடம் சென்று 20 ரூபாயை கொடுத்தேன் . அதை வாங்கிக்கொண்டு ரசீதும் என் காகிதங்களையும் கொடுத்து மற்றொரு அலுவலரிடம் என்னை அனுப்பினார். 5 நிமிட காத்திருக்குப்பின் என்னுடைய புதிய பாலிசி ஆவணங்களை பெற்றுக்கொண்டு மிக பெரிய நன்றியை தெரிவித்துவிட்டு சற்றே சோர்வாக என் வண்டியை நோக்கி நடந்தேன்.