நன்றி.. திரு.இயகோகா சுப்பிரமணியம்
ஒன்றான பாரதத்தை ஒருங்கிணைந்து துண்டாடி
உடன்பிறப்பை வெறுப்பேற்றி பகையாக்கி வைத்ததுவும்;
சென்றோடி ஒதுங்கிவிட்ட சுயநல பரங்கியர்கள்
சூழ்ச்சியால் இந்தியரின் மனவளத்தை சிதைத்ததுவும்;
வென்றாள வந்தவர்கள் தின்றதை தீர்த்தத்தை
வெடிவைத்தும் பொடிவைத்தும் மக்களிடம் மறைத்ததுவும்;
மன்றாடி மாமனிதர் பெற்றதை பாராளு
மன்றத்தில் கண்மூடி குழிதோண்டி புதைத்ததுவும்;
ஊழல் ஒழியவென்று உண்ணாது தவமிருந்து
உயர்ந்தவரை பொய்யரென்று ஊடகத்தில் உரைத்ததுவும்;
சூழல் கெடுமளவு மண்வளத்தில் நீர்நிலையில்
அந்நியரின் விஷவிதைகள் நஞ்சுமழை பொழிந்ததுவும்;
பூமலையும் தேன்தினையும் பொங்கிவரும் வனவழகைப்
பழாக்கித் தினம்வெட்டி பறவைகளை அழித்ததுவும்;
நாவளையும் என்பதனால் நாள்தோறும் சொல்மாற்றி
நம்பினோர் வாழ்க்கையிலே வஞ்சகம் இழைத்ததுவும்;
இத்தாலி வேண்டாம் இவன்துனையும் வேண்டாம்
இல்லறமே தவறென்று எவருடனும் கூடுவதும்;
கொத்தோடு குலையாடக் கூடியே வாழ்ந்தவர்கள்
தெறித்தோடித் தனிமையிலே தினம்நொந்து வாடுவதும்;
பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவென்று
மதுவிற்று அரசாங்கம் வருமானம் தேடுவதும்;
இத்தோடு போதுமென இளமைதான் சதமென்று
தப்பான ஆட்டங்கள் தலைகனத்து ஆடுவதும்;
ஆணோடு ஆண்சேரும் ஒவ்வாத உறவுதனை
என்னுரிமை எனகூறி போர்க்கொடிகள் ஏந்துவதும்;
ஊனோடு கலந்துவிட்ட உன்னத பண்புகளை
உதவாது எனவுரைத்து எதிர்திசையில் நீந்துவதும்;
வானோடு வளர்ந்திருந்த முன்னோரின் வார்த்தைகளை
வீணென்று புறந்தள்ளி வீணருடன் சேர்ந்ததுவும்;
ஊரோடு பலர்சேர்ந்து உச்சத்தில் கூச்சலிட்டால்
கொலைகாரன் தியாகியெனக் கூசாமல் ஏற்பதுவும்;
கோடிகளில் கொள்ளையிட்டு சிறைசென்று மாண்புகெட்டும்
குற்றமே இல்லையெனக் குணவானாய் நடிப்பதுவும்;
தேடியதில் கிடைத்ததெனத் தோண்டியதை வழித்தெடுத்து
தேசத்தில் கனிமங்கள் திருட்டிலே வடிப்பதுவும்;
ஊர்ச்சொத்து சிவன்சொத்து என்றறிந்தும் விற்றுப்பின்
ஊருக்கே நீதிசொல்லும் தலைவனென படிந்ததுவும்;
ஒர்ச்சத்தும் இல்லாத அயல்நாட்டு தின்பண்டம்
உயர்ந்ததென வீம்புக்கு உண்டு உடல் கெடுத்ததுவும்;
இன்றோடு ஒழியட்டும், இனியேனும் விடியட்டும்
இளைஞர்கள் எல்லார்க்கும் புதுஞானம் எழவேண்டும்;
ஒன்றான எம்தேசம் ஒருகுரலில் ஆணையிட்டால்
இங்குள்ள துரோகிகள் இடுப்பொடிந்து விழவேண்டும்;
சென்றாண்டு நைல்நதியில் மல்லிகை பூவெடித்த
சீவனுள்ள போராட்டம் மாற்றங்கள் தரவேண்டும்;
குன்றாண்டு தமிழ்ஆளும் குமரனவன் கருணைமனம்
எல்லோரும் நலம்வாழ புத்தாண்டில் துணைவேண்டும்
- இயகோகா சுப்பிரமணியம்